பெங்களூருவில் நடைபெற்று வரும் துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் காலிறுதியில், வடக்கு மண்டல அணியின் வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபி அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். கிழக்கு மண்டல அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஒரே ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை பெற்று, முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் சாதனையை சமன் செய்தார்.

வடக்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 405 ரன் எடுத்தது. அதற்கு பதிலாக கிழக்கு மண்டல அணி 230 ரன்னுக்கு மட்டுமே சுருண்டது. இதில் நபி 53வது ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பந்துகளில் விராத் சிங், மானிஷி, முக்தர் உசேன் ஆகியோரை வெளியேற்றினார். பின் 55வது ஓவரின் தொடக்க பந்தில் சூரஜ் சிந்து ஜெய்ஸ்வாலை அவுட் செய்து நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 57வது ஓவரில் முகமது ஷமியையும் அவுட் செய்தார்.
இதன் மூலம் துலீப் டிராபி வரலாற்றில் ஹாட்ரிக் விக்கெட்டை பெற்ற மூன்றாவது பவுலரானார் நபி. இதற்கு முன் கபில்தேவ் (1978-79) மற்றும் சாய்ராஜ் பஹுதுலே (2001) ஆகியோர் இந்த சாதனையை படைத்திருந்தனர். மேலும், ஒரே போட்டியில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை சாய்த்த நான்காவது இந்திய பவுலரானார் அவர்.
மற்றொரு காலிறுதியில் மத்திய மண்டல அணி வலுவாக விளையாடியது. டேனிஷ் மலேவர் அபார இரட்டை சதம் (203) அடித்தார். கேப்டன் ரஜத் படிதர் (125) சிறப்பாக இணைந்து விளையாடியதால், மத்திய மண்டல அணி 532/4 என அறிவித்து இன்னிங்சை முடித்தது. ஆட்டநேர முடிவில் வடகிழக்கு மண்டல அணி 168/7 ரன்னில் சிக்கித் தவித்தது.