மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்து இந்திய அணியை சரிவில் இருந்து காப்பாற்றிய இளம் வீரர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு ஆந்திர கிரிக்கெட் சங்கம் ரூ.25 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய மூத்த வீரர்கள் ரன் குவிக்கத் தவறினாலும், நிதிஷ் குமார் ரெட்டி சதம் அடித்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றினார்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறிக்கொண்டிருந்தபோது, 21 வயதான நிதிஷ் குமார் ரெட்டி 8வது பேட்ஸ்மேனாக களம் இறங்கினார். இக்கட்டான சூழ்நிலையில் நிதானமாக 50 ரன்கள் எடுத்த நிதிஷ்குமார், அதை ‘புஷ்பா’ படத்தின் ஸ்டைலில் கொண்டாடினார்.
தொடர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். இதற்கு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கரவொலி எழுப்பினர். சதம் அடிக்க ஒரு ரன் மட்டுமே தேவை என்ற நிலையில், நிதிஷ்குமாரின் தந்தை கண்களை மூடி பிரார்த்தனை செய்யும் புகைப்படங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
இதையடுத்து, நான்காம் நாள் ஆட்டத்தில் 114 ரன்கள் எடுத்திருந்த போது நிதீஷ் குமார் ரெட்டி விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இளம் வயதில் முதல் டெஸ்ட் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் நிதிஷ் குமார் 3வது இடம் பிடித்துள்ளார். இதற்கு முன், சச்சின் டெண்டுல்கர் 18 வயதிலும், ரிஷப் பந்த் 21 வயதிலும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
இரண்டாவது இன்னிங்சில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, இதுவரை 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.