மும்பை: இந்திய கிரிக்கெட் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு திருமண நிச்சயம் உறுதி ஆகியுள்ள நிலையில், அவரது சொத்து மதிப்பு மற்றும் வருமான விவரங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. அர்ஜுன் தற்போது ஐபிஎல் தொடர் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ரூ.30 லட்சம் ஆண்டுக்கு வருவாயை ஈட்டுகிறார். 2021ஆம் ஆண்டில் மும்பை அணியுடன் ஒப்பந்தம் செய்து அடுத்த ஆண்டில் 30 லட்சத்திற்கு மீண்டும் ஒப்பந்தம் பெற்றார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் ஐபிஎல் மூலம் 1.40 கோடி ஊதியம் பெற்றுள்ளார்.

அதேபோல், ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்டாக் அலி போன்ற முன்னணி தொடர்களில் கோவா அணியின் பிரதிநிதியாக விளையாடுகிறார். இதனால் அவருக்கு ஆண்டுக்கு 50 லட்சம் வரை ஊதியம் கிடைக்கிறது. தற்போது அர்ஜுன் தந்தை சச்சினுடன் மும்பையில் உள்ள வீட்டில் தங்கியுள்ளார். 2007ஆம் ஆண்டில் சச்சின் ரூ.39 கோடிக்கு வாங்கிய அந்த வீட்டின் மதிப்பு தற்போது ரூ.100 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும், சச்சின் லண்டனில் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்திற்கு அருகே ஒரு வீடு வாங்கியுள்ளார். அதே இடத்தில் அர்ஜுன் பயிற்சி மேற்கொள்ளும் கிரிக்கெட் அகாடமியும் உள்ளது. இந்த அகாடமியை அர்ஜுன் நிர்வகிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அர்ஜுன் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு ரூ.22 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. திருமண நிச்சயதார்த்தம் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகளான சானியா சந்தோக்குடன் நடைபெற இருக்கிறது.