ஆசியக் கோப்பை டி–20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எளிதாக வீழ்த்தி வெற்றிபெற்றது. அடுத்ததாக வரும் 14ஆம் தேதி இந்தியா–பாகிஸ்தான் மோதல் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டம் தொடங்குவதற்கே முன்பே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியா–பாகிஸ்தான் ஆட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. நான்கு சட்ட மாணவர்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தி பாகிஸ்தான் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டுடன் விளையாடுவது தேசிய கண்ணியத்துக்கும் மக்களின் உணர்வுக்கும் முரணானது என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் விஷ்ணு அமர்வு விசாரித்தது. வழக்கறிஞர்கள் “போட்டி நடத்தப்படுவது தேச நலனுக்கு எதிரானது” என வாதிட்டனர். ஆனால், நீதிபதிகள் “இது வெறும் விளையாட்டு போட்டி” எனக் குறிப்பிட்டு, அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றனர். மேலும், கிரிக்கெட் போட்டியை அரசியல் மற்றும் பயங்கரவாதச் சம்பவங்களுடன் இணைத்து பார்க்கக்கூடாது என்றும் தெரிவித்தனர்.
இதன்வழி, இந்தியா–பாகிஸ்தான் மோதல் திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பால் ரசிகர்களிடையே நிம்மதி நிலவுகிறது. இந்தியா வெற்றிகரமாக தொடரைத் தொடங்கிய நிலையில், பாகிஸ்தானை எதிர்கொள்ளும் ஆட்டம் மிகுந்த சுவாரஸ்யத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் இந்த ஆட்டத்தை ஆவலுடன் காத்திருக்கின்றனர்.