துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறும் ஆசியக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன. அசுர பலத்துடன் இருக்கும் இந்திய அணி, சுலப வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை கேப்டன் சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக வருவார்கள். அவர்களைத் தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஆல்-ரவுண்டர்கள் ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே களமிறங்குவார்கள்.

கீப்பர்-பேட்டர் சஞ்சு சாம்சனுக்கு டாப்-3 இடத்தில் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இதனால் ஜிதேஷ் சர்மா கீப்பராக வர வாய்ப்பு அதிகம். அக்சர் படேல், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் பந்துவீச்சில் முக்கிய பங்காற்றுவார்கள். துபாய் ஆடுகளம் முன்பு சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால், கூடுதலாக குல்தீப் அல்லது வருண் சக்ரவர்த்தி களமிறங்கலாம் என கருதப்படுகிறது.
மிகுந்த பலமில்லாத எமிரேட்ஸ் அணியை வழிநடத்தும் கேப்டன் முகமது வசீம், பயிற்சியாளராக உள்ள லால்சந்த் ராஜ்புட் வழிகாட்டுதலில் ஆட்டத்தை எதிர்கொள்கிறார். அவருடன் ராகுல் சோப்ரா, சிம்ரன்ஜீத் சிங் போன்ற வீரர்களும் இந்திய அணிக்கு எதிராக விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். சிம்ரன்ஜீத் சிங், சுப்மன் கிலுடன் பஞ்சாபில் பயிற்சி மேற்கொண்ட அனுபவம் குறித்து நினைவுகூர்ந்துள்ளார்.
இரு அணிகளும் சர்வதேச T20 போட்டியில் கடைசியாக 2016ல் மோதியபோது, இந்தியா எமிரேட்ஸை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இம்முறை துபாய் பிச்சு பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு சமநிலை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. வெப்பமான வானிலையிலும், இரு அணிகளின் பலப்பரீட்சை கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆவலை கிளப்பியுள்ளது.