மெல்பர்ன்: இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. இந்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம் கான்ஸ்டாஸின் பேட்டிங்கும் ஷேன் வாட்சனை நினைவுபடுத்துவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்தியா ஏ அணிக்கு எதிராக சாம் கான்ஸ்டாஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பின்னர் இந்திய அணிக்கு எதிரான பகலிரவு பயிற்சி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்கவில்லை. சாம் கான்ஸ்டாஸ் கூறியதாவது:- ஜஸ்பிரித் பும்ராவின் பந்தை எதிர்கொள்ளும் திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அது என்னவென்று நான் சொல்ல மாட்டேன்.
பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பேன். இந்த வயதில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதன் மூலம் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறும். எனது பெற்றோர் பாக்சிங் டே டெஸ்டைக் காண மைதானத்திற்கு வருகிறார்கள். இது எனக்கு ஒரு சிறப்பு நாளாக இருக்கும். நான் விளையாடுவதற்காக என் பெற்றோர் நிறைய தியாகம் செய்துள்ளனர்.
அவர்களுக்கு ஏதாவது திருப்பிக் கொடுத்தால் நன்றாக இருக்கும். மெல்போர்ன் ஆடுகளம் நான் முன்பு விளையாடிய ஆடுகளங்களில் இருந்து இப்போது வித்தியாசமாக உள்ளது. ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இருப்பினும், மெல்போர்ன் மைதானத்தில் பாக்சிங் டே டெஸ்ட் விளையாட வேண்டும் என்ற எனது கனவு தற்போது நனவாகியுள்ளது. ஷேன் வாட்சனிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.
பந்து வீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க விரும்புகிறேன். வாட்சன் ஒரு ஜாம்பவான், எனது முதல் போட்டியில் அவரைப் போல் என்னால் செயல்பட முடியும் என்று நம்புகிறேன். சாம் கான்ஸ்டாஸ் கூறினார். இந்தியாவுக்கு எதிரான முதல் 3 டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்காக தொடக்க ஆட்டக்காரர் நாதன் மெக்ஸ்வீனியும் பும்ராவின் பந்துவீச்சுக்கு எதிராக இதே போன்ற கருத்துக்களை தெரிவித்தார்.
ஆனால் அவரது பந்துவீச்சில் 4 முறை ஆட்டமிழந்தார். இதன் காரணமாக கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து மெக்ஸ்வீனி நீக்கப்பட்டார். தற்போது அவருக்கு பதிலாக சாம் கான்ஸ்டாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்விங்கிங் பந்துகள் காரணமாக கான்ஸ்டாஸ் உள்நாட்டுப் போட்டிகளில் பலமுறை ஆட்டமிழந்துள்ளார். எனவே, பும்ராவின் பந்துவீச்சு அவருக்கு கடினமான சவாலாக இருக்கலாம்.