பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெறும் மூன்று பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். டிரினிடாடில் நடந்த இந்த போட்டியில், 9வது ஓவரில் ஜெய்டன் சீல்ஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். இதன் பின்னர், பாகிஸ்தான் அணி தடுமாறி, மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் தோல்வி கண்டது. இதனால், தொடரை மேற்கிந்திய தீவுகள் 1-1 என சமன் செய்தது.

இந்த மோசமான ஆட்டத்திற்குப் பிறகு, சமூக வலைதளங்களில் பாபர் அசாமுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரசிகர்கள் அவரை “ஓவர்ரேட்டட்” என குற்றம் சாட்டி, அவர் ஜிம்பாப்வே, நேபாளம் போன்ற பலவீன அணிகளுக்கு எதிராக மட்டுமே ரன்கள் எடுப்பார் என்றும், வலுவான அணிகளுக்கு எதிராகச் சொதப்புவார் என்றும் கூறினர். “No Nepal, no party for statpadder” என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி, பலரும் அவரை கிண்டலடித்தனர்.
பாபர் அசாம் கடைசியாக 2023 ஆசிய கோப்பையில் நேபாளத்துக்கு எதிராக சதம் அடித்திருந்தார். அதன் பிறகு அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என ரசிகர்கள் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டினர். சிலர், “சதத்தை வெறும் 100 ரன்களில் தவறவிட்டுவிட்டார்” என சாடினர். முதல் ஒருநாள் போட்டியில் 47 ரன்கள் எடுத்திருந்தாலும், இரண்டாவது போட்டியில் டக் அவுட் ஆனது அவரது மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் நிலைமை குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. முன்னணி வீரரான பாபர் தொடர்ந்து தன்னுடைய ஆட்டத்தை நிரூபிக்க முடியாவிட்டால், அணியின் வெற்றிக்கு பெரிய சவாலாக இருக்கும் என ரசிகர்கள் கூறுகின்றனர். இப்போட்டிக்குப் பிறகு, பாபர் மீது வரும் விமர்சனங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.