ஐபிஎல் 2025 தொடரின் 52வது போட்டி மே 3ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. களமிறங்கிய பெங்களூரு அணிக்கு ஆரம்பத்தில் விராட் கோலி மற்றும் ஜேக்கப் பேத்தல் அருமையான தொடக்கத்தை வழங்கினர். இருவரும் சிஎஸ்கே பவுலர்களை தாக்கி 10 ஓவரில் 97 ரன்கள் சேர்த்தனர். பேத்தல் 33 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தபோது அவுட்டானார். கோலி தனது ஆட்டத்தில் மாறுபட்ட அணுகுமுறையை பின்பற்றி 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் அடித்தார்.

இந்தப் போட்டியின் போது சின்னசாமி மைதானத்தில் விராட் கோலி 152வது சிக்ஸரை பதிவு செய்தார். இதன் மூலம் அவர் டி20 கிரிக்கெட்டில் ஒரே மைதானத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன் கிரிஸ் கெயில் 151 சிக்ஸர்களுடன் முன்னிலை வகித்தார். மேலும், ஒரு அணிக்காக 300 சிக்ஸர்கள் (301*) அடித்த முதல் வீரராகவும் கோலி திகழ்கிறார். இதற்கு முன் அந்த பட்டத்தை கிரிஸ் கெயில் தனது 263 சிக்ஸர்களுடன் பெற்றிருந்தார்.
மிடில் ஆர்டர் பகுதியில் தேவ்தூத் படிக்கல் 17, கேப்டன் படிதார் 11 மற்றும் ஜிதேஷ் சர்மா 7 ரன்னில் அவுட்டானதால் சென்னை சிறிது மீள வாய்ப்பு பெற்றது. ஆனால் 19வது ஓவரில் ரோமாரியா செப்பார்டு கலீல் அகமதுக்கு எதிராக ஒரு ஓவரில் 33 ரன்கள் குவித்தார். அந்த ஓவரில் அவர் அடித்த பந்துகள் 6, 6, 4, 6, 6 (நோ பால்), 0, 4 எனச் சென்றது. அடுத்த ஓவரிலும் 20 ரன்கள் சேர்த்த அவர் 14 பந்துகளில் 53* ரன்கள் அடித்து அசத்தினார்.
இந்த அபார பேட்டிங் மூலம் ஐபிஎல் இல் இரண்டாவது வேகமான அரைசதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் கேஎல் ராகுல் மற்றும் பட் கமின்ஸ் ஆகியோருடன் சமனிலை பெற்றார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவரில் 213/5 ரன்கள் குவித்து ஒரு சக்திவாய்ந்த ஸ்கோர் அமைத்தது. சென்னை அணிக்கு இது வரலாற்று ரீதியாக ஒரு கடினமான இலக்கு என்பதால் தோல்வி ஆரம்பத்திலேயே நிச்சயமானது போலவே தெரிந்தது.
சிஎஸ்கே பக்கம் பதிரனா மட்டுமே சிறப்பாக பவுலிங் செய்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் பெங்களூருவின் தொடக்கம், கோலியின் சிக்ஸர் விலாசம் மற்றும் செப்பார்டுவின் அதிரடி ஃபினிஷிங் ஆகியவை இந்தப் போட்டியில் வெற்றிக்கு வழிவகுத்தன. 2019க்குப்பின் சிஎஸ்கே அணி 180 ரன்கள் அதிகமான இலக்குகளை சேஸ் செய்து வென்றதில்லை என்பதும் இந்த தோல்வியை முன்னே கணிக்கக் காரணமாக அமைந்தது.