இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கான 2024–25 ஆண்டுக்கான மத்திய சம்பள ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஒப்பந்த பட்டியலில் இவ்வருடமும் ஏ ப்ளஸ் பிரிவில் அதிகபட்சமாக ரூ.7 கோடி பெறும் வீரர்களாக ஜாம்பவான் வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் ஏ ப்ளஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

அடுத்த நிலையான ஏ பிரிவில் வருடத்திற்கு ரூ.5 கோடி பெறும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், பவுலர்கள் முகமது சிராஜ், மொஹம்மட் ஷமி, கே.எல்.ராகுல் மற்றும் இளம் திறமைவாய்ந்த சுப்மன் கில் ஆகிய ஆறு பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஏ பின்வரும் கிரேட் பி பிரிவில் ரூ.3 கோடி சம்பளத்துடன் சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வாகியுள்ளனர். கடந்த ஆண்டில் ரஞ்சி போட்டிகளில் பங்கேற்காததால் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ், இப்போது 2024 ஐபிஎல்-ல் கோல்கத்தாவுக்கு தலைமை வகித்து வெற்றி பெற்றதோடு, 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்து கோப்பை வெல்லவும் உதவியதால் மீண்டும் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியான சாதனைகளால் ஜெய்ஸ்வாலும் பி பிரிவுக்கு முன்னேறியுள்ளார். இப்போது முதல் முறையாக ஒப்பந்தத்தில் இடம் பிடித்துள்ள வருண் சக்கரவர்த்தி, கடந்த ஆண்டில் கம்பேக் கொடுத்து சாம்பியன்ஸ் டிராபியில் திறமையை நிரூபித்தார். அதனால் ஒரு கோடி ரூபாயுடன் அவர் சி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவருடன் சமீபத்திய தொடர்களில் கணிசமான பங்களிப்பு வழங்கிய நிதிஸ் ரெட்டி, திலக் வர்மா, ரிங்கு சிங், ரவி பிஸ்னோய், அர்ஷ்தீப் சிங், சர்பராஸ் கான் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோரும் சி பிரிவில் இணைக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், ரஜத் படிதார், சிவம் துபே, துருவ் ஜுரேல், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, ஹர்ஷித் ராணா ஆகியோரும் இந்த முறை ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த முறையில் நீக்கப்பட்ட இஷான் கிசான், தற்போது மீண்டும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளார். இவ்வாறு, இந்த முறை பிசிசிஐ தேர்ந்தெடுத்த மத்திய ஒப்பந்த பட்டியல், அணியின் தற்போதைய நிலையை பிரதிபலிக்கிறது. தொடர்ச்சியாக செயல்படும் திறமைசாலிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, மீண்டும் திறமையை நிரூபித்தவர்கள் நேர்மறையாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளனர்.