லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறும் ஆசியக் கோப்பை ‘டி-20’ தொடரில் பங்கேற்க உள்ளது. இதைத் தொடர்ந்து அக்டோபர்–நவம்பரில் இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பல்வேறு வீரர்கள், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள், காயங்களால் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆசியக் கோப்பை முடிந்தவுடன், வீரர்கள் அனைவரும் ‘யோ-யோ’, ‘பிரான்கோ’ எனப்படும் ‘பிட்னஸ்’ சோதனையில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

ரோகித் சர்மா, பும்ரா, சிராஜ், சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் ஆகஸ்ட் 29 முதல் 31 வரை பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்து சோதனையில் பங்கேற்றனர். ஆனால், ‘சீனியர்’ வீரர் கோலி மட்டும் லண்டனில் குடும்பத்துடன் தங்கியிருந்ததால், அங்கிருந்தபடியே பி.சி.சி.ஐ. அனுமதியுடன் ‘பிட்னஸ்’ சோதனை முடித்து அறிக்கையை அனுப்பியுள்ளார்.
பிசியோதெரபிஸ்ட் மற்றும் ‘கண்டிஷனிங்’ பயிற்சியாளர்கள், வீரர்கள் குறித்த அறிக்கைகளை பி.சி.சி.ஐ.க்கு அனுப்பியுள்ளனர். அதில் கோலியின் அறிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளது. பி.சி.சி.ஐ. தரப்பில் ஒருவர், “வெளிநாட்டிலிருந்தே சோதனையில் பங்கேற்க கோலி முன்னதாகவே அனுமதி பெற்றிருந்தார்” என்று கூறியுள்ளார்.
ஆனால், கோலிக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்தச் சலுகை தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. எதிர்காலத்தில், வெளிநாட்டில் ஓய்வில் இருக்கும் பிற வீரர்களும் இதே முறையில் சோதனையில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.