2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது வரலாற்றில் ஒரு முக்கியமான சாதனை. ரோஹித் சர்மா தலைமையிலான அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடந்த தொடரில் தோல்வியின்றி கோப்பையை கைப்பற்றியது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு உலக சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது.
இந்திய அணி வெற்றிக்காக பிசிசிஐ 124 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்தது. மும்பையில் வான்கடே மைதானத்தில் நடந்த விழாவில் அந்த பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பிசிசிஐ வீரர்களுக்கு வைரக் கற்கள் பதிக்கப்பட்ட தங்க மோதிரத்தை பரிசாக வழங்கியது.

மோதிரத்தின் மையத்தில் அசோகச் சக்கரம் உள்ளது. அதன் சுற்று பகுதிகளில் “டி20 உலக சாம்பியன் இந்தியா” என பொன்னெழுத்தில் எழுதப்பட்டுள்ளது. மோதிரத்தில் வீரர்களின் பெயர், ஜெர்சி எண் மற்றும் இந்தியாவின் வெற்றியை குறிக்கும் “7” என்ற எண் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த மோதிரங்கள் பிசிசிஐ விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய அணிக்கு வழங்கப்பட்டன.
ரோஹித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், அக்சர் பட்டேல், ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் இந்த மோதிரங்களை பெற்றனர். பிசிசிஐ இதை பற்றி சமூக வலைதளங்களில் பகிர்ந்து, இந்திய அணியின் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடியது. இந்த மோதிரங்களை ட்ரீம் லெவன் ஸ்பான்சர்ஷிப் செய்தது. இந்திய அணியின் அடுத்த இலக்கு சாம்பியன்ஸ் டிராபி வெற்றியாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.