2025 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடும் வீழ்ச்சியுடன் போராடி வருகிறது. இதுவரை 13 போட்டிகளில் விளையாடிய நிலையில், 10 தோல்விகளை சந்தித்துள்ளது. நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக வெறும் பத்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த ஆண்டு தொடரில் பல போட்டிகளில் வெற்றிக்கு நெருக்கமாக சென்றும், கடைசி நேரத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில், அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், அணியின் தோல்விக்குக் காரணம் பவுலர்கள் தான் எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பேட்ஸ்மேன்களைப் பொறுப்பேற்க சொல்ல முடியாது என்றும், பவுலர்களால் தான் நிலைமை இப்படியானதாகி விட்டதாகவும் அவர் கூறினார். பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு, பத்திரிக்கையாளர்களை சந்தித்த டிராவிட், பவுலிங்கின் குறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அவர் கூறுகையில், “220 ரன்கள் என்ற இலக்கு இந்த போட்டிக்குக் கூடுதல். 195 அல்லது 200 ரன்கள் எடுத்திருந்தால் போதும். ஆனால் நாங்கள் 20 ரன்கள் கூடுதலாக விட்டுக் கொடுத்தோம். இந்தத் தொடரில் பல போட்டிகளில் இதுபோன்ற சூழ்நிலைகளால் தோல்வி ஏற்பட்டது” என்றார். மேலும், “நாங்கள் வெற்றிக்கு மிக நெருக்கமாக சென்றாலும், அந்த கடைசி முக்கியமான ஷாட்களை அடிக்க முடியவில்லை. இதுவே பல போட்டிகளில் தோல்விக்கு காரணமாக மாறியது” என்றும் அவர் கூறினார்.
டிராவிட் மேலும், லோயர் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முக்கிய நேரங்களில் ஆட்டத்தை முடிக்க இயலாமல் போனது குறித்து வருத்தம் தெரிவித்தார். ஒன்று அல்லது இரண்டு பெரிய ஷாட்கள் போதும் என்ற தருணங்களில் கூட அச்சம் மற்றும் அனுபவக்குறைவால் அணிக்கு வெற்றி கிட்டவில்லை என்று விளக்கியுள்ளார்.
அணியின் செயல்திறனில் பவுலிங் முக்கியமாக பாதிப்பை ஏற்படுத்தியதாக டிராவிட் கூறியது, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரிய விவாதத்தை தூண்டியுள்ளது. மீதமுள்ள போட்டிகளில் ராஜஸ்தான் மீண்டு வருமா என்பது சந்தேகமாக உள்ளது.