பும்ரா தனது விருப்பப்படி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பது குறித்து சமீபத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. முதுகு அறுவை சிகிச்சையிலிருந்து மீண்ட அவர், இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் மட்டுமே விளையாட முன்கூட்டியே தெரிவித்தார். லீட்ஸ், லார்ட்ஸ், மான்செஸ்டர் டெஸ்ட்களில் பங்கேற்று இருமுறை ஐந்து விக்கெட்டுகள் உட்பட 14 விக்கெட்டுகளை எடுத்தார். அவர் இல்லாத பர்மிங்ஹாம் மற்றும் ஓவல் டெஸ்ட்களில் இந்தியா வெற்றி பெற்றது. இதேவேளை சிராஜ் அனைத்து டெஸ்ட்களிலும் விளையாடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் 2–2 என சமநிலையாக்கினார். பணிச்சுமை காரணமாக பும்ராவுக்கு மட்டும் ஓய்வு கொடுப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னாள் வீரர் சந்தீப் பாட்டீல், ஒரே வீரருக்கு சலுகை அளிப்பதை பிசிசிஐ எப்படி ஒப்புக் கொள்கிறது என கேள்வி எழுப்பினார். அவரின் கூற்றுப்படி, கேப்டன் அல்லது பயிற்சியாளர் அல்லாமல் பிசியோதெரபிஸ்ட் ஆலோசனையின் பேரில் ஒருவருக்கு ஓய்வு கொடுப்பது சரியல்ல. தேர்வு வீரர்களின் உடற்தகுதியை மட்டுமே பொருத்தது ஆக வேண்டும் என்றார். தனது காலத்தில் கவாஸ்கர், கபில் தேவ் போன்றவர்கள் காயம் இருந்தும் தொடர்ந்து விளையாடியதை அவர் எடுத்துக்காட்டினார்.
ரகானே, பும்ரா மூன்று டெஸ்டுகளில் மட்டுமே விளையாடுவதாக அணியிடம் கூறிய துணிச்சலைச் சுட்டிக்காட்டினார். இதேபோல் வேறு ஒருவர் சொன்னால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார் என்றார். பும்ரா 5 டெஸ்டிலும் விளையாட வேண்டுமானால், ஒரே நேரத்தில் அதிக ஓவர்கள் வீசாமல், மூன்று அல்லது நான்கு ஓவர்கள் மட்டுமே கொடுக்கலாம் என்றும் பரிந்துரைத்தார்.
முன்னாள் கேப்டன் கபில் தேவ், இங்கிலாந்து தொடரின் உண்மையான ஹீரோ சிராஜ் தான் என்று பாராட்டினார். பும்ரா இல்லாத நேரத்தில் இந்திய பந்துவீச்சை சிறப்பாக வழிநடத்தியவர் அவர் என்றும், ஓய்வு இல்லாமல் விளையாடும் வீரர்களே இந்திய அணிக்கு தேவை என்றார்.
இந்த விவகாரம், இந்திய கிரிக்கெட்டில் தேர்வு மற்றும் ஓய்வு கொடுக்கும் முறைகள் குறித்தும், பணிச்சுமை மேலாண்மை உண்மையில் வீரர் செயல்திறனை மேம்படுத்துகிறதா அல்லது சலுகை வழங்கும் வழியாக மாறுகிறதா என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளது.