மான்ட்ரியல்: கனடாவின் இளம் டென்னிஸ் வீராங்கனை விக்டோரியா எம்போகோ, மான்ட்ரியலில் நடந்த டபிள்யு.டி.ஏ. (WTA) நேஷனல் பாங்க் ஓபன் தொடரில் தனது முதல் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
பைனலில் ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்த்து விளையாடிய எம்போகோ, முதல் செட்டை 2-6 என்ற கணக்கில் இழந்தபின், அடுத்த இரு செட்டுகளிலும் 6-4, 6-1 என அபாரமாக பதிலடி கொடுத்து வெற்றியை கைப்பற்றினார்.

இப்போட்டி 2 மணி நேரம் 4 நிமிடங்கள் நீடித்தது. 18 வயதான எம்போகோ, சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற 3வது கனடா வீராங்கனையாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
இந்த தொடரில், அமெரிக்காவின் சோபியா கெனின், கோகோ காஃப், கஜகஸ்தானின் எலேனா ரிபாகினா மற்றும் பைனலில் நவோமி ஒசாகாவை வீழ்த்தியதன் மூலம், அவர் டபிள்யு.டி.ஏ தரவரிசையில் 85வது இடத்திலிருந்து 24வது இடத்திற்கு உயர்ந்துள்ளார்.
ஆண்கள் பிரிவில், டொரான்டோவில் நடந்த ஏ.டி.பி. ஒற்றையர் பைனலில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், ரஷ்யாவின் கரேன் கச்சானோவுக்கு எதிராக 6-7, 6-4, 7-6 என வென்று தனது 3வது ஏ.டி.பி பட்டத்தை வென்றார். இதனால், தரவரிசையில் 6வது இடத்திற்கு முன்னேற, ஜோகோவிச் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.