மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் இந்தத் தொடரில், மொத்தம் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. அணிக்கான தேர்வில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் இளம் வீரர் சுப்மன் கில், இந்த முறை ஒருநாள் தொடருக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் ஷர்மா இடம் பெற்றிருந்தாலும், கேப்டன் பொறுப்பு கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், கேஎல் ராகுல், முகமது சிராஜ் உள்ளிட்ட அனுபவமிக்க வீரர்களும் அணியில் உள்ளனர்.
அதே நேரத்தில், டி20 தொடருக்கான இந்திய அணியும் தனியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கும் வகையில் அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங் போன்றோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகிய பந்துவீச்சாளர்களும் அணியை வலுப்படுத்துகின்றனர்.
இந்திய அணியின் புதிய அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கில் தலைமையிலான ஒருநாள் அணி மற்றும் சூர்யகுமார் தலைமையிலான டி20 அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எப்படி செயல்படப்போகிறது என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இந்தத் தொடர், அடுத்த உலகக்கோப்பைக்கு முன் இந்திய அணியின் தயாரிப்பை வெளிப்படுத்தும் முக்கிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.