சென்னை: 2025 ஆசிய கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு, முன்னாள் வீரர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் கேப்டன் மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், “இந்த அணியால் ஆசிய கோப்பையை வெல்லலாம், ஆனால் டி20 உலகக்கோப்பையை வெல்ல முடியாது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவின் முடிவுகள் தன்னை அதிர்ச்சியடைய வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். “அடுத்த ஆறு மாதங்களில் டி20 உலகக்கோப்பை நடக்க இருக்கிறது. அதற்கான தயாரிப்பு இது தானா? முன்னோக்கிப் போகாமல், தேர்வாளர்கள் பின்னோக்கிச் செல்கிறார்கள்,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
ஃபார்மில் இல்லாத ரிங்கு சிங், சிவம் துபே, ஹர்ஷித் ராணா ஆகியோருக்கு இடம் கொடுத்ததை அவர் கடுமையாக எதிர்த்தார். “ஐபிஎல் தொடரே அடிப்படையாகக் கருதப்பட வேண்டும். ஆனால் தேர்வாளர்கள் வேறு தரப்புகளை பார்த்துள்ளனர்,” என்றார்.
அதோடு, கடந்த ஒரு வருடமாக டி20 ஆடாத சுப்மன் கில்லை துணை கேப்டனாக நியமித்தது குறித்து அவர் சாடினார். “ஏற்கனவே துணை கேப்டனாக இருந்த அக்சர் படேல் ஏன் நீக்கப்பட்டார்?” என்ற கேள்வியையும் எழுப்பினார்.
அணியின் பேட்டிங் ஆர்டரிலும் குழப்பம் இருப்பதாக ஸ்ரீகாந்த் குற்றம்சாட்டினார். “ஐந்தாவது இடத்தில் யார் விளையாடப் போகிறார்கள்? ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா அல்லது ரிங்கு சிங்? இந்த அணியில் திட்டமிடல் குறைவாக உள்ளது,” என்றார்.
மேலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற நல்ல ஃபார்மில் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பு தரப்படாததும் அவர் கவலையுடன் கூறினார். இதன் மூலம் ஆசிய கோப்பைக்கான அணித் தேர்வு குறித்த சர்ச்சை மேலும் தீவிரமடைந்துள்ளது.