இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி தனது 44வது பிறந்த நாளை ஜூலை 7ஆம் தேதி கொண்டாடினார். உலக கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான சாதனைகளை செய்து இந்திய அணிக்கு பல வெற்றிகளை அளித்தவர் தோனி. 2007 டி20 உலகக் கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய மூன்றையும் வென்ற ஒரே கேப்டனாக இருந்தார். IPL மற்றும் சாம்பியன்ஸ் லீக் போன்ற லீக்குகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

தோனி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். கடந்த சீசனில் சிஎஸ்கே அணி 10வது இடத்தில் முடிந்தது அவரது ஓய்வைச் சுட்டிக்காட்டும் ஒரு சிக்னலாகவே பார்க்கப்பட்டது. சிலர் அவரது உடல்நிலை குறித்து சந்தேகத்தை தெரிவித்தபோதும், தோனி நேரடியாகவே இன்னும் ஏழு மாதத்திற்கு பிறகு தான் முடிவு எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
தனது பிறந்த நாளில் ராஞ்சியில் தனது பழைய நண்பர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய தோனி, தனது எளிமையான அணுகுமுறையை மீண்டும் நிரூபித்தார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. தோனி தனது ஆரம்பநிலை நண்பர்களை இன்றும் நினைவில் வைத்திருப்பது அவரது மனிதநேயத்தைக் காட்டுகிறது.
அடுத்த IPL தொடர் தொடங்கும் போது தோனிக்கு 45 வயதாகி இருக்கும். அவர் மேலும் ஒரு சீசன் விளையாடுவாரா என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போது தோனி ஓய்வு பெறும் நேரம் நெருங்கி விட்டதாக சிலரும் கருதுகின்றனர். இருப்பினும், தோனியின் முடிவே இறுதியானது.