ஆண்டர்சன்–டெண்டுல்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்ஸ் நகரில் ஜூன் 20 ஆம் தேதி தொடங்கி, ஐந்து நாள்களுக்கும் பிறகு இங்கிலாந்தின் அபார வெற்றியுடன் நிறைவடைந்தது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இருவரும் தங்களது முதல் இன்னிங்ஸில் தலா 450க்கு மேல் ரன்கள் குவித்த விறுவிறுப்பான போட்டியாக அமைந்தது.

முதலில் இந்தியா 471 ரன்கள் எடுத்ததற்குப் பிறகு, இங்கிலாந்து தனது பதிலடி இன்னிங்ஸில் 465 ரன்கள் சேர்த்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 364 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்துக்கு வெற்றிக்கான இலக்கு 371. இந்த இலக்கை ஜேக் கிராவ்லி, பென் டக்கெட் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் மூலம் மிகச் சிறப்பாக துரத்திய இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்பில் 373 ரன்கள் எடுத்து 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.
போட்டியை வெற்றி பெற்றதையடுத்து பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “இந்த மைதானத்தில் ஏற்கனவே எங்களுக்கு நல்ல நினைவுகள் இருக்கின்றன. இந்த வெற்றியும் அதில் சேர்வதால் மிகவும் மகிழ்ச்சி. நாங்கள் தொடர்ந்து செசிங் செய்வதில் நம்பிக்கை வைத்திருந்தோம். ஏனெனில், இந்த மைதானம் பேட்டிங்குக்கும், பந்து வீச்சுக்கும் சீரான ஆதரவுடன் அமைந்தது,” எனத் தெரிவித்தார்.
அவரது பாராட்டில் துவக்க வீரர்கள் கிராவ்லி மற்றும் டக்கெட் முக்கிய இடம் பெற்றனர். “அவர்கள் அமைத்த பார்ட்னர்ஷிப் வெற்றிக்கு அடித்தளமாக இருந்தது. நாங்கள் தொடரை வெற்றியுடன் துவங்கியதில் மகிழ்ச்சி. மொத்தம் ஐந்து போட்டிகள் உள்ளன. எங்கள் அணியினர் அனைவரும் இந்த வெற்றியின் உச்ச உணர்வில் இருக்கிறார்கள். அடுத்த ஆட்டங்களிலும் இதே தீவிரம் காட்டுவோம்,” என்றார் ஸ்டோக்ஸ் உறுதியாக.