புதுடில்லி: ஆர் சி பி வெற்றி கொண்டாட்டத்தில் நெரிசலில் சிக்கி ரசிகர்கள் இறந்தது குறித்து கிரிக்கெட்டுக்கு சோகமான நாள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி கோப்பையை வென்ற பின்னர் நடந்த வெற்றிக் கொண்டாட்டம் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பெருந்துயரத்தை அளித்துள்ளது. நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அனில் கும்ப்ளே, கிரிக்கெட்டுக்கு இது ஒரு சோகமான நாள், துயரமும் கூட என வருத்தப்பட்டுள்ளார்.
மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சோகச் சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
18 ஆண்டுகளில் முதல் முறையாக ஆர் சி பி அணி ஐபிஎல் கோப்பை வென்றதால் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். அதே மனநிலையுடன் ஆயிரக்கணக்கானோர் சின்னசாமி ஸ்டேடியத்தில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். 33 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.