சென்னை: சென்னையின் மையப்பகுதியில், முதல்முறையாக நடக்கும் பார்முலா 4 ரேஸ் போட்டியை மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிரியர்களும், ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
சென்னையில், பார்முலா 4 கார் ரேஸ் இன்று துவங்கி, நாளை நிறைவுறுகிறது. சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள 3.5 கி.மீ., துார சாலையில், இரவு நேர போட்டியாக நடக்கிறது. இதில், 19 திருப்பங்கள், அதிவேக நேர் வழிகளுடன் பந்தய பாதை அமைந்துள்ளது.
இதை, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், ரேசிங் புரோமோட்டர்ஸ் என்ற தனியார் அமைப்பும் இணைந்த நடத்துகின்றனர். இதை, 9,000 பேர் பார்க்க உள்ளனர். இதுகுறித்து, தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பெரும் முயற்சியுடன், சென்னையில் இந்த கார் ரேஸ் நடத்தப்படுகிறது. இது, நாட்டிற்கும், தமிழகத்தின் சென்னைக்கும் பெருமை சேர்க்கும். உலக மோட்டார் ஸ்போர்ட்ஸ் வரைபடத்தில், சென்னையும் இடம்பெற வாய்ப்பாக அமையும்.
பார்வையாளர்களுக்கு, ‘த்ரில்’லான அனுபவத்தை வழங்க உள்ள இந்த பந்தயத்தில் கார்கள் 200 கி.மீ., வேகத்தில் செல்லும். இதில், வீரர்களின் திறமை, சாதுர்யம் வெளிப்படும். வரலாற்று சிறப்பு மிக்க கோட்டை, மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களை சுற்றி நிகழும் இதில், பார்வையாளர்கள், வீரர்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.