பாரீஸ்: ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதிச் சுற்றில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி அரையிறுதி சுற்றில் இந்திய அணி இன்று உலக சாம்பியன் ஜெர்மனியுடன் மோதியது.
இரவு 10.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்றது. அரையிறுதிக்கு தகுந்த விறுவிறுப்புடன் தொடங்கிய ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்தில் இந்திய அணி சார்பில் கேப்டன் ஹர்மன்பிரீத் முதல் கோலை அடித்தார். இதையடுத்து, ஆக்ரோஷமாக விளையாடிய ஜெர்மனி அணி, இரண்டாவது காலிறுதி ஆட்டம் தொடங்கிய 18வது நிமிடத்தில் முதல் கோலைப் போட்டது. கிறிஸ்டோபர் ரூர் அடித்த கோலின் காரணமாக, முதல் பாதியில் ஜெர்மனி 2-1 என முன்னிலை பெற்றது.
மூன்றாவது காலிறுதியில் சுக்ஜீத் சிங் ஒரு கோல் அடிக்க, ஜெர்மனிக்கு எதிராக இந்தியா 2-2 என டிரா செய்தது. 54வது நிமிடத்தில் மார்கோ மில்ட்காவ் மற்றொரு கோல் அடித்து ஜெர்மனியின் எண்ணிக்கையை நீட்டித்தார். இன்னும் 6 நிமிடங்களே இருந்த நிலையில் கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி கடைசி வரை கடுமையாக போராடியது.
இருப்பினும் கடைசி பத்து வினாடிகளில் ஷம்ஷரின் பந்து கோலை தாண்டி சென்றது. இதன் மூலம் ஜெர்மனி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதன் பின்னர் நாளை மாலை 5.30 மணிக்கு இந்தியா – ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான வெண்கலப் பதக்கப் போட்டி நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டியில் நெதர்லாந்தும் ஜெர்மனியும் தங்கப் பதக்கத்திற்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.