இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து தற்போது 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட் ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டரில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமனாக்கவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ள நிலையில், அணித்தேர்வில் மாற்றங்கள் தேவைப்படுவதாக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் இந்திய சுழற்பந்து வீரர் ஹர்பஜன் சிங் தனது உறுதியான கருத்தை பதிவு செய்துள்ளார். “இந்த டெஸ்டில் குல்தீப் யாதவ் கண்டிப்பாக விளையாடவேண்டும். இங்கிலாந்தின் அதிரடி பேட்டிங் ஸ்டைலை குல்தீப்பால் கட்டுப்படுத்த முடியும். அவர் ஒரு மர்மமான பவுலராகத் தெரிகிறார்” என கூறிய அவர், “அவருக்காக நீங்கள் ஒரு பேட்ஸ்மேனை குறைக்க வேண்டும். நிதிஷ் ரெட்டியை நீக்கி குல்தீப்பை சேர்த்திருப்பேன்” என்றார்.
மேலும், தனது ஆதரவை இளம் வீரர் சாய் சுதர்சனுக்காகவும் தெரிவித்த ஹர்பஜன், “சாய் சுதர்சனுக்கு வெறும் ஒரு போட்டியிலேயே வாய்ப்பு கொடுத்து அவரை அணியிலிருந்து நீக்கி விட்டது தவறு. அவருக்கு குறைந்தது 3 போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இவரை நீக்கி மீண்டும் கருண் நாயரை சேர்க்கலாம் என பேசுவது நியாயமல்ல. இது வீரரின் மன உறுதியை பாதிக்கும்” என வேதனையுடன் கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்தியா ஒருமுறையும் மான்செஸ்டர் ஓல்ட் ட்ராஃபோர்டில் வெற்றி பெறாத வரலாற்றைக் கொண்டு இருப்பது கவலையளிக்கிறது. ஆனால் இளம் வீரர்களின் புதிய தலைமையுடன் இந்த தடையை இந்தியா மீறுமா என்பதை எதிர்நோக்கலாம்.