சென்னை: ஹாக்கி இந்தியா அமைப்பு நடத்தும் 6-வது சீசன் ஹாக்கி இந்தியா லீக் போட்டிகள் வரும் 28-ம் தேதி துவங்குகிறது. ஒடிசாவின் ரூர்கேலா மற்றும் ராஞ்சியில் பிப்ரவரி 1, 2025 வரை நடைபெறும் இந்தத் தொடரில் ஆண்கள் பிரிவில் 8 அணிகள் பங்கேற்கின்றன. சென்னையை சேர்ந்த தமிழ்நாடு டிராகன்ஸ் அணி முதன்முறையாக பங்கேற்கிறது.
இந்த அணியை சார்லஸ் குழுமம் வாங்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் வீரர்கள் மற்றும் அணியின் சீருடை அறிமுகம் சென்னையில் நடைபெற்றது. இதில் அணியின் உரிமையாளர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், ஹாக்கி இந்தியா பொருளாளரும், தமிழ்நாடு ஹாக்கி சங்க தலைவருமான சேகர் மனோகரன், தலைமை செயல் அதிகாரி உதய்ஷின் வாலா, உதவி பயிற்சியாளர் சார்லஸ் டிக்சன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

டோக்கியோ மற்றும் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அமித் ரோஹிதாஸ் தமிழ்நாடு டிராகன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழக வீரர்களான செல்வம் கார்த்தி, அர்ஜூன், திலீபன், செந்தமிழ்ரசு, ஆனந்த், பிருத்வி ஆகிய 6 பேர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.