சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 5 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. அணியின் செயல்பாடுகளை பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி, அணியின் தோல்வி தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.
சேப்பாக்கம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மந்தமான பேட்டிங் வரிசை இந்தப் போட்டியிலும் அப்பட்டமாக அம்பலமானது. “விளையாட்டின் முடிவு மற்றும் அணியின் செயல்திறனில் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்.

நிச்சயமாக, நாம் ஒவ்வொருவரும் நாம் என்ன செய்கிறோம் என்பதை ஆராய்ந்து மேம்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். எங்கள் அணியின் விளையாட்டு பாணியைப் பற்றி நிறைய பேசப்படுகிறது. எங்கள் வீரர்களின் இயல்பான வரம்பிற்கு வெளியே விளையாட நாங்கள் கேட்கவில்லை.
மேலும், அணியில் நல்ல வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நாம் பணியாற்ற வேண்டும். அதன் பிறகு, அவர்கள் நிச்சயமாக ரன்களை அடிக்கத் தொடங்குவார்கள், எல்லாம் மாறும் என்று நம்புகிறேன். ருதுராஜ் அணியில் இல்லாதது பெரிய இழப்பு.
இந்த சீசனில் இதுவரை நாங்கள் தொடர்ந்து நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை என்பதை முதலில் ஒப்புக்கொள்வேன். அதே சமயம், அணியின் பலம் மற்றும் திறமையைக் கருத்தில் கொண்டு, நாங்கள் பிளே-ஆஃப்களுக்குச் செல்ல முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று மைக்கேல் ஹஸ்ஸி கூறினார்.