சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் ஆறாவது தோல்வியை சந்தித்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளது சிஎஸ்கே. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஏல உத்தியும், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் போன்ற இந்திய வீரர்களை ஏலத்தில் வாங்கத் தவறியதே அணியின் தடுமாற்றத்துக்கு காரணம் என முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் பட்டத்தை 5 முறை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் உள்ளது. கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற தோனியால் தோல்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. இந்நிலையில்தான் சுரேஷ் ரெய்னா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதுதான் சிஎஸ்கேயின் இப்போதைய சவால். “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும், பயிற்சியாளரும் ஏலத்தில் சிறப்பாக செயல்படவில்லை என்று நினைக்கிறேன். பல திறமையான வீரர்கள் ஏலத்தில் கலந்து கொண்டனர். பிரயன்ஷ் ஆர்யா போன்ற அபார திறமை கொண்ட பல இளம் வீரர்கள் இருந்தனர். அவரைப் பாருங்கள், இந்த சீசனில் அவர் அறிமுகமாகி சதம் அடித்தார். ஏலத்திற்கு முன் அணியைத் தேர்ந்தெடுக்கவோ அல்லது உருவாக்கவோ கையில் நிறைய பணம் இருந்தது.
ஆனால், ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் போன்ற வீரர்களை ஏலத்தில் வாங்கத் தவறிவிட்டீர்கள். மற்ற ஐபிஎல் அணிகளைப் பாருங்கள். அவர்கள் எவ்வளவு ஆக்ரோஷமாக விளையாடுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். சிஎஸ்கே இவ்வளவு தடுமாறுவதை நான் பார்த்ததே இல்லை” என்று விரக்தியுடன் கூறினார் ரெய்னா.