மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா, 311 ரன்கள் பின்தங்கிய சூழலில் இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து தப்பி மிகுந்த போராட்டத்துடன் டிரா செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் சுதர்சன் டக் அவுட்டாகிய நிலையில் இந்தியா 0/2 என சரிந்து, ரசிகர்கள் பெரும் பதற்றத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் கேப்டன் சுப்மன் கில் சிறப்பாக சதம் அடித்து 103 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக ராகுல் 90 ரன்கள் விளாசினார். இந்த முக்கிய தருணத்தில் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரும் ஆட்டத்தை கட்டுப்படுத்தி, இந்தியாவை தோல்வியில் இருந்து மீட்டனர்.

இங்கிலாந்து அணியின் சில வீரர்கள் போட்டியை முடிக்க விரும்பிய போதும், கில் அதை நிராகரித்து தொடர்ந்தார். இதனால், சுந்தரும் ஜடேஜாவும் தங்கள் சதத்தை நிலைநிறுத்தினர். போட்டி முடிந்த பிறகு கில் பேசுகையில், “இந்த போட்டியை ஒவ்வொரு பந்தாக அணுகி டிராவாக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். சுந்தர், ஜடேஜா இருவரும் நம்பிக்கையை ஏற்படுத்தியவர்களாக இருந்தனர். கடைசி நாளில் ஒவ்வொரு பந்தும் புதிய சவாலாகவே இருந்தது” என்றார்.
அதே நேரத்தில், “இந்த தொடர் கடைசி நாளில் முடிவடையும் போட்டிகளால் நிரம்பியுள்ளது. இதனால் பல பாடங்களை நாங்கள் பெற்றுள்ளோம். கடந்த காலத்திலான ஆட்டங்களை விட தற்போது ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் முக்கியமாக உள்ளது. இங்கிலாந்துக்கு பதிலடி அளிக்க அடுத்த போட்டியில் வெற்றி பெறுவோம்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார் கில். மேலும், “நாட்டுக்காக விளையாடும்போது ஏற்படும் அழுத்தங்கள், எனது உறுதியையும் நாட்டுக்காகச் செய்யும் பங்களிப்பையும் காட்டுகிறது” என்றார்.
முதலாம் இன்னிங்ஸில் இந்தியா நல்ல ஸ்கோர் செய்ததாலும், ஆனால் பெரிய ஸ்கோருக்கு செல்ல இயலாததாலும் வெற்றியை பிடிக்க முடியவில்லை எனவும், இரண்டாவது இன்னிங்ஸில் அதே தவறை திருத்தியதில் மகிழ்ச்சி எனவும் அவர் தெரிவித்தார். பும்ரா அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து தற்போது உறுதி இல்லை. போட்டியை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் தான் டாஸ் கூட பெரிய விஷயமாக நான் பார்க்கவில்லை எனவும் கூறியுள்ளார் கில்.