துபாய்: ஆஸ்திரேலியா மிகவும் வலிமையான எதிரணி. நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அரையிறுதியில் கடந்த மூன்று போட்டிகளில் எப்படி விளையாடினோமோ, அதே வழியில் விளையாட வேண்டும். ஆஸ்திரேலிய அணி எப்படி விளையாடும் என்பது எங்களுக்கு தெரியும். ஆட்டத்தின் நடுவில் சில பதட்டமான சூழ்நிலைகள் இருக்கும். இப்போதெல்லாம் போட்டிகள் அப்படித்தான். இரு அணிகளுக்கும் கண்டிப்பாக அழுத்தம் இருக்கும் ஒரு அணியாக, ஒரு வீரராக, பேட்டிங் அணியாக, பந்துவீச்சு அணியாக, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறோம்.
இது எங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது. ஆஸ்திரேலிய அணி பல ஆண்டுகளாக சிறப்பாக உள்ளது. எனவே அவர்கள் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஒவ்வொரு முறையும், ஆடுகளம் வெவ்வேறு சவால்களை அளிக்கிறது. இங்கு நாங்கள் விளையாடிய மூன்று போட்டிகளிலும் ஆடுகளம் வித்தியாசமாக இருந்தது. இது எங்கள் சொந்த மைதானம் அல்ல, துபாய். நாங்கள் இங்கு அதிக போட்டிகளில் விளையாடுவதில்லை, இது எங்களுக்கு புதியது. இங்கு நான்கு அல்லது ஐந்து ஆடுகளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அரையிறுதியில் எந்த ஆடுகளத்தில் விளையாடப் போகிறோம் என்று தெரியவில்லை. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசியபோது, கொஞ்சம் ஸ்விங் ஏற்பட்டது. முதல் இரண்டு போட்டிகளில் எங்கள் பந்துவீச்சாளர்கள் பந்துவீசியபோது நாங்கள் அதைப் பார்க்கவில்லை. இரண்டாவது போட்டியில் பந்துகள் அதிகம் சுழலவில்லை. ஆனால் கடந்த போட்டியில் பந்துகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. ஒவ்வொரு ஆடுகளத்திலும் வெவ்வேறு விஷயங்கள் நடக்கும். எனவே, இந்த ஆடுகளத்தில் என்ன நடக்கும், எது நடக்காது என்பது எங்களுக்குத் தெரியும் என்று சொல்வதில் அர்த்தமில்லை.
ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இருந்தால், போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். இங்கு ஆடுகளம் மெதுவாக இருப்பதை இரண்டு மாதங்களாக இங்கு நடந்த போட்டிகளின் மூலம் அறிந்தோம். அதன் அடிப்படையில் அணியை தேர்வு செய்தோம். மெதுவாக பந்து வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் இந்த ஆடுகளத்தில் உதவுவார்கள். 5-6 நாட்களுக்கு முன்பே துபாய்க்கு வந்து பயிற்சி செய்ததால், இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க உதவியது என்றார் ரோஹித் சர்மா.