கோலாலம்பூர்: 19 வயதுக்குட்பட்ட பெண்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. மலேசியாவின் கோலாலம்பூரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் குரூப்-1 ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் விளையாடிய வங்கதேசம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஜனாதுல் மவோ 14 ரன்களும், சுமய்யா அக்தர் 21 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்தனர். இந்திய அணி தரப்பில் வைஷ்ணவி சர்மா 3, ஷப்னம் ஷகில், வி.ஜே. தோஷிதா, கோங்கடி த்ரிஷா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் விளையாடிய இந்திய அணி 7.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

த்ரிஷா கோங்காடி 40 ரன்னிலும், கமாலினி 3 ரன்னிலும் வீழ்ந்தனர். சனிகா சால்கே 11 ரன்னுடனும், கேப்டன் நிக்கி பிரசாத் 5 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வைஷ்ணவி சர்மா ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்திய மகளிர் அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 28-ம் தேதி எதிர்கொள்கிறது.