ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நடைபெற்ற இந்தியா–பாகிஸ்தான் போட்டி பரபரப்பாக முடிந்தது. பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் இரு அணிகளிடமும் அதிகமான பதற்றம் நிலவியது. டாஸ் போடும் போதே இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா ஒருவருக்கொருவர் கை குலுக்காமல் தவிர்த்தனர். மேலும், தேசிய கீத நிகழ்வின் போது தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டு சில நொடிகள் பாடல் ஒலித்ததால் பாகிஸ்தான் வீரர்கள் குழப்பமடைந்தனர்.

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவரில் 127 ரன்களுக்கு மட்டுமே தடம் பதித்தது. இந்திய பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களும், பும்ரா மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்களும் கைப்பற்றினர். பின்னர் 128 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்திய அணி 15.5 ஓவர்களில் எளிதாக கடந்து வெற்றி பெற்றது. கேப்டன் சூர்யகுமார் 47 ரன்கள் அடித்து அசத்தினார்.
ஆட்டம் முடிந்தபின் வழக்கம்போல் இரு அணிகளும் கை குலுக்க வேண்டும். ஆனால், இந்திய வீரர்கள் தங்களுக்குள் வாழ்த்து தெரிவித்துவிட்டு நேரடியாக டிரெஸ்ஸிங் ரூமுக்கு சென்றனர். பாகிஸ்தான் வீரர்கள் சில நொடிகள் காத்திருந்தும், கை குலுக்க இந்திய வீரர்கள் வராததால் அதிர்ச்சி அடைந்தனர். இந்திய கேப்டன் சூர்யகுமார், இந்த வெற்றியை பாதுகாப்புப் படைக்கு அர்ப்பணிப்பதாகவும், தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கு பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் மனம் உடைந்து பேசியுள்ளார். பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர், “இந்தியா நன்றாக விளையாடியது. இது கிரிக்கெட், அரசியலாக்க வேண்டாம். கை குலுக்காதது வருத்தமாக இருக்கிறது. சண்டைகள் எங்கும் நடக்கும், ஆனால் அதை மறந்து முன்னேற வேண்டும். கை குலுக்கி, பெருந்தன்மை காட்ட வேண்டும்” என்று உணர்ச்சிபூர்வமாக கருத்து தெரிவித்துள்ளார்.