சென்னை: 4-வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. இறுதி நாளில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் இந்தியா 21 தங்கம், 22 வெள்ளி, 5 வெண்கலம் என 48 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது. இலங்கை அணி 9 தங்கம், 9 வெள்ளி, 17 வெண்கலம் என 35 பதக்கங்களை வென்று 2-வது இடத்தைப் பிடித்தது.
முன்னதாக ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவின் பிரியன்ஷு 3:53.2 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான ராகுல் சர்னாலியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் தீபிகா 54.98 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
மற்றொரு இந்திய வீராங்கனை பூனம் (51.21) வெள்ளிப் பதக்கம் வென்றார். பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் தமன்னா (14.43), பூஜா குமாரி (14.02) வெள்ளிப் பதக்கம் வென்றனர். பெண்களுக்கான 4 X 400 தொடர் ஓட்டத்தில் சச்சின் சாங்லி, சந்திரா மோல் சாபு, கனிஸ்டா தீனா, நீரு பதக் ஆகியோர் அடங்கிய அணி தங்கம் வென்றது.
இலங்கை அணி 2-வது இடத்தையும், பங்களாதேஷ் அணி 3-வது இடத்தையும் பெற்றன. பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் வினிதா குர்ஜார் முதலிடத்தையும், மற்றொரு இந்திய வீராங்கனை லக்ஷிதா வினோத் சாண்டிலியா இரண்டாவது இடத்தையும், இலங்கையின் துலாஞ்சீ மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.