பெங்களூரு: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று ஆரம்பமாகிறது. வான் மழையை மிஞ்சி, கோலி ரன் மழை பொழிய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
முதல் போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் துவங்குகிறது. இந்திய அணி, வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது. ‘டாப்-ஆர்டரில்’ அடுத்த தலைமுறை வீரர்களான சுப்மன் கில், ஜெய்ஸ்வால் அசத்துகின்றனர். கடின டெஸ்ட் சவாலுக்கு ஏற்ப தங்களை பக்குவப்படுத்திக் கொண்டனர்.
கடந்த 10 இன்னிங்சில் சுப்மன் 3 சதம், 2 அரைசதம் அடித்துள்ளார். ஜெய்ஸ்வால் கடந்த 8 இன்னிங்சில் ஒரு முறை 214 ரன், 5 அரைசதம் அடித்துள்ளார். இருவரும் வேகப்பந்துவீச்சில் தடுமாறுவதை தவிர்க்க வேண்டும். நியூசிலாந்து அணியில் அனுபவ டிம் சவுத்தீ, மாட் ஹென்றி, வில்லியம் ஓ’ ரூர்கே போன்ற வேகங்கள் இருப்பதால் கவனமாக விளையாட வேண்டும்.
சுப்மன் கில் கழுத்து பிடிப்பால் அவதிப்படுகிறார். இவருக்கு பதில் சர்பராஸ் கான் இடம் பெறலாம். மூன்றாவது இடத்தில் ராகுல் வரலாம். கீப்பர், பேட்டராக ரிஷாப் பன்ட் மீண்டும் அசத்தலாம். சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, கோலி திறமை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ரோகித் இந்த ஆண்டு 15 இன்னிங்சில் 2 சதம், 1 அரைசதம் உட்பட 497 ரன் எடுத்துள்ளார்.
கோலியை பொறுத்தவரை இந்த ஆண்டு விளையாடிய 6 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. தென் ஆப்ரிக்கா (46 ரன்), வங்கதேசத்திற்கு (47) எதிராக ரன் வேட்டையை துவக்கினார். ஆனால், பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. இது 2019-2023 காலக்கட்டத்தில் இவர் தடுமாறியதை நினைவுபடுத்தியது. தவிர, சுழலுக்கு எதிராக தடுமாறுகிறார்.
நியூசிலாந்து அணியில் அஜாஸ் படேல், ரச்சின் ரவிந்திர என இரு ‘சுழல்’ நாயகர்கள் உள்ளனர். பெங்களூரு சின்னசாமி மைதானம் ‘சுழலுக்கு’ கைகொடுக்கும் என்பதால், இக்கட்டான நிலையில் உள்ளார் கோலி. இந்திய அணியின் பந்துவீச்சு பலமாக உள்ளது.
வங்கதேச தொடரில் 11 விக்கெட் வீழ்த்திய பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் ‘வேகத்தில்’ அசத்தலாம். ‘சுழல்’ ஜாலத்திற்கு அஷ்வின், ரவிந்திர ஜடேஜா உள்ளனர். டாம் லதாம் தலைமையிலான நியூசிலாந்து அணி பரிதாப நிலையில் உள்ளது. சமீபத்தில் இலங்கைக்கு எதிரான தொடரை 0-2 என இழந்தது. காயத்தால் வில்லியம்சன் (இடுப்பு, தொடையில் பிடிப்பு) விலகியது பெரும் பின்னடைவு.
கடைசி நேரத்தில் வேகப்பந்துவீச்சாளர் பென் சியர்ஸ் (முழங்கால் காயம்) நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதில் டெஸ்ட் அனுபவம் இல்லாத பென் சியர்ஸ் இடம் பெற்றுள்ளார். கான்வே, வில் யங் கிளன் பிலிப்ஸ், டேரில் மிட்சல் நம்பிக்கை தருகின்றனர். டெஸ்ட் அரங்கில் கோலி 115 போட்டியில் 8,947 ரன் எடுத்துள்ளார். இன்னும் 53 ரன் எடுத்தால், 9,000 ரன்னை எட்டலாம்.
சச்சின் (200 போட்டியில் 15,921 ரன்), டிராவிட் (163ல் 13, 265) கவாஸ்கருக்கு (125ல் 10,122) பின் இம்மைல்கல்லை எட்டும் நான்காவது இந்திய வீரராகலாம். இரு அணிகளும் 62 டெஸ்டில் விளையாடின. இதில் இந்தியா 22, நியூசிலாந்து 13ல் வென்றன. 27 ‘டிரா’ ஆகின. மழை காரணமாக ஆடுகளம் துவக்கத்தில் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கலாம்.
போகப் போக ‘ஸ்பின்னர்’கள் சாதிக்கலாம். வரும் ஐந்து நாளும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தண்ணீரை விரைவாக வெளியேற்றும் வசதி இருப்பது சாதகம். வங்கதேசத்திற்கு எதிரான கான்பூர் டெஸ்டில் மழை குறுக்கிட்ட போதும், இரண்டே நாளில் இந்தியா வென்றது. இதனால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.