புதுடில்லி: ஆசிய கோப்பை ‘டி-20’ தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்ற நம்பிக்கையை முன்னாள் வீரர் வீரேந்தர் சேவக் தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற உள்ளது. துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெறும் இந்த தொடரில், இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் முறையில் ஆடவுள்ளனர். புள்ளிகளில் முன்னிலை வகிக்கும் அணிகள் சூப்பர்–4 சுற்றுக்கு செல்லும். அங்கே ‘டாப்–2’ இடம் பிடிக்கும் அணிகள் பைனலில் மோத உள்ளன.

இந்த தொடரின் ஒளிபரப்பு சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாகவும், சோனி லைவ் தளத்தில் நேரடியாகவும் ஒளிபரப்பப்படுகிறது. இதற்காக ‘ரக் ரக் மே பாரத்’ என்ற வாசகத்துடன் விளம்பரப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் அந்த விளம்பரம் வெளியாகியுள்ளது.
இந்த சூழலில், இந்திய கிரிக்கெட் முன்னாள் நட்சத்திரம் சேவக் கூறியதாவது:
“இந்திய அணியில் இளம் வீரர்கள், அனுபவம் கொண்டவர்கள் கலந்து உள்ளனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் துணிச்சலான தலைமையுடன் தாக்குதல் பாணியில் விளையாடுகிறார். அவரின் முன்னிலையில் இந்தியா வெற்றிக்காக போராடும். வெற்றி இலக்கை நோக்கி ஒருங்கிணைந்து செயல்பட்டால், கோப்பை எடுப்பது நிச்சயம்.” என அவர் தெரிவித்துள்ளார்.
சேவக் மேலும், “இந்த விளம்பரம் இந்திய கிரிக்கெட்டின் இதயத் துடிப்பை பிரதிபலிக்கிறது. இந்தியா வெற்றியடைய வேண்டும் என்ற உணர்வை நாட்டின் ஒவ்வொரு ரசிகரிடமும் உருவாக்குகிறது” என்றும் கூறினார்.