பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறப் போவதாக இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் அறிவித்துள்ளார்.
36 வயதான அவர், இந்திய அணிக்காக 328 சர்வதேச ஆட்டங்களில் விளையாடி உள்ளார். இரண்டு முறை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சிறந்த கோல்கீப்பர் விருதை வென்றுள்ளார். ஒலிம்பிக், ஹாக்கி உலக சாம்பியன்ஷிப், ஆசிய போட்டிகள், காமன்வெல்த் என பல்வேறு தொடர்களில் பதக்கம் வென்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய அணியில் பிரதான பங்களிப்பை வழங்கியவர். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். ஹாக்கி விளையாட்டில் இந்தியாவின் பெருஞ்சுவர் என போற்றப்படுகிறார். கடந்த 2004-ல் இந்திய யு-21 அணியுடன் அணியுடன் இவரது பயணம் தொடங்கியது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்தார்.
அதன் பிறகு ஆஸ்தான கோல்கீப்பர் ஆனார். லண்டன், ரியோ, டோக்கியோ, இப்போது பாரிஸ் என தொடர்ச்சியாக நான்கு ஒலிம்பிக்கில் இந்திய அணிக்காக விளையாடுகிறார். இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில், பி.ஆர்.ஸ்ரீஜேஷ் தனது சமூக வலைதளப் பதிவில் “சர்வதேச ஹாக்கியில் எனது கடைசி அத்தியாயத்தில் நான் உள்ளேன். இந்நேரத்தில் எனது நெஞ்மெல்லாம் நன்றியுணர்வு நிறைந்துள்ளது. என்னை நம்பியதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு அத்தியாயத்தின் முடிவு மற்றும் ஒரு புதிய சாகசத்தின் தொடக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.