புடாபெஸ்ட்: ஹங்கேரியின் புடாபெஸ்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த 4-வது சுற்றில் இந்திய ஆடவர் அணி செர்பியாவை எதிர்கொண்டது.
முதல் கேமில் இந்திய வீரர் டி.குகேஷ் 85-வது காய் நகர்த்தலின் போது பிராட்கே அலெக்சாண்டரை வீழ்த்தினார். 2-வது ஆட்டத்தில் பிரக்னாந்தா, செர்பியாவின் சரானா அலெக்ஸி இடையேயான ஆட்டம் 23-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.
தொடர்ந்து 3-வது கேமில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி 40-வது காய் நகர்த்தலில் வெற்றி பெற்றார். 4-வது ஆட்டத்தில் அலெக்சாண்டருக்கு எதிரான 81-வது ஆட்டத்தில் இந்தியாவின் விதித் குஜராத்தி, இவிக் வெலிமிரை வீழ்த்தினார்.
இறுதியில், இந்திய ஆண்கள் அணி 3.5 – 0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணிக்கு இது 4-வது வெற்றியாகும். இதில் பெண்கள் பிரிவில் இந்திய அணி பிரான்ஸ் அணியுடன் மோதியது. முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹரிகா துரோணவல்வி 52-வது நகர்த்தலில் பிரான்ஸ் வீராங்கனை டவுலிட் கார்னெட் டயமன்ட்டை வீழ்த்தினார்.
மிலியட் சோஃபி உடனான 2-வது ஆட்டத்தில் இந்தியாவின் ஆர்.வைஷாலி 26-வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.
தொடர்ச்சியாக 3-வது கேமில் திவ்யா தேஷ்முக் 56-வது நகர்த்தலில் ஹெஜாசி போர் மித்ராவையும், 50-வது நகர்வில் தானியா சச்தேவ் பென்மெஸ்பா நடாசாவையும் வீழ்த்தினர். முடிவில் இந்திய மகளிர் அணி 3.5 – 0.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய மகளிர் அணிக்கு இது 4-வது வெற்றியாகும்.