புதுடெல்லி: யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்தியா உதவ வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம் பிரதமர் மோடி இலங்கை வந்தார். அப்போது, 1996-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றிருந்த இலங்கை வீரர்கள், பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, அவர்களை பாராட்டி, இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடியை சந்தித்த போது, இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், இலங்கை அணியின் பயிற்சியாளருமான சனத் ஜெயசூர்யா, யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்தியா உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சனத் ஜெயசூர்யா கூறியதாவது:-

பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கைக்கு இந்தியா ஏராளமான உதவிகளை செய்துள்ளது. அதற்கு நான் நன்றி கூறுகிறேன். யாழ்ப்பாணத்தில் இருந்து நிறைய திறமையான கிரிக்கெட் வீரர்கள் வருகிறார்கள். ஆனால் அங்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் இல்லை. அங்கு மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் பயிற்சியாளர்களை நியமித்து திறமையான வீரர்களை அடையாளம் கண்டு வருகின்றோம்.
இவர்களுக்கு உதவும் வகையில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்தியா உதவ வேண்டும். இதற்காக பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளேன். இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இவ்வாறு அவர் கூறினார்.