சென்னை: இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி புள்ளிப் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. இதுவரை 9 போட்டிகளில் பங்கேற்ற சிஎஸ்கே, வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 7 போட்டிகளில் தோல்வியடைந்து கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமென்றால், எஞ்சியுள்ள ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது. ஆனால், இந்த வெற்றிகள் மட்டுமின்றி, மற்ற அணிகளின் தோல்விகளும் அந்த வாய்ப்பிற்கு அவசியம். தற்போது சிஎஸ்கே அதிகபட்சமாக பெறக்கூடிய புள்ளி 14 மட்டுமே.

இதே நேரத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி ஏற்கனவே 10 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளை பெற்றுள்ளது. மும்பை, குஜராத், டெல்லி, பஞ்சாப், லக்னோ, கொல்கத்தா அணிகளும் சிஎஸ்கேவைக் காட்டிலும் மேல்நிலையில் உள்ளன. எனவே சிஎஸ்கேவின் பிளே ஆஃப் வாய்ப்பு மிக குறைவாகவே இருக்கிறது.
இன்றைய போட்டியிலும் சிஎஸ்கே தோல்வியடைந்தால், தொடரில் முதல் வெளியேறும் அணியாக மாறும் அபாயம் நிலவுகிறது. இந்த நிலையில், அணியில் மாற்றம் செய்யும் நோக்கில் 22 வயதான வன்ஷ் பேடியை பிளேயிங் லெவனில் சேர்க்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே பிரேவிஸ் மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகிய இளம் வீரர்களுக்கு சிஎஸ்கே வாய்ப்பு அளித்தது போலவே, வன்ஷ் பேடியும் டெல்லி பிரீமியர் லீக் தொடரில் சிறப்பாக விளையாடிய நிலையில், அவரும் அந்த பட்டியலில் சேர விருப்பம் காணப்படுகின்றது. இதன் விளைவாக, அணியில் இருந்து தீபக் ஹூடா நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.
போட்டி ஆரம்பத்திற்கு இன்னும் சில மணி நேரமே உள்ள நிலையில், ஒருகாலத்தில் 10 நிமிடங்களில் விற்றுவிடும் சேப்பாக்கத் டிக்கெட்டுகள், தற்போது இன்னும் விற்பனை ஆகாமல் இருப்பது, ரசிகர்கள் சிஎஸ்கே அணியின்மீது ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தையும் கோபத்தையும் பிரதிபலிக்கிறது.
சிஎஸ்கே மீதான நம்பிக்கை மீண்டும் கிடைக்கும் வழி ஏதேனும் உள்ளதா என்ற எதிர்பார்ப்பு தொடரும் நிலையில், இளம் வீரர்களின் பங்களிப்பு அணிக்கு புதிய உயிரூட்டலாக அமையுமா என்பது கவனிக்கத்தக்கது.