ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) முதல் அணியாக லீக் சுற்றில் வெளியேறியது. ஏப்ரல் 30-ஆம் தேதி பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன்மூலம், இந்த வருடம் 10 போட்டிகளில் 8 தோல்விகளை சந்தித்துள்ள சென்னை, புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தை பிடித்துள்ளது. அதன் காரணமாக, 2020, 2022, 2024 ஆகிய ஆண்டுகளுக்கு பிறகு, 4வது முறையாக சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேறியுள்ளது. இதன் விளைவாக, சென்னை ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, ஏற்கனவே தோனி கூறியபடி, 2026ஆம் ஆண்டில் கம்பேக் கொடுப்பதற்காக சிஎஸ்கே புதிய அணியை உருவாக்கும் என நம்பப்படுகிறது. இந்த நிலையில், 9.75 கோடிக்கு வாங்கப்பட்ட மூத்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அவர் இந்த வருடம் 7 இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை 9.29 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ள நிலையில், சிஎஸ்கே அணியால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன.
இந்த நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வினை சரியாகப் பயன்படுத்தாமல் குறை சொல்வது சரியல்ல என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, “சென்னை அணி சூழ்நிலைக்கு தகுந்தபடி அணியை தேர்ந்தெடுக்கவில்லை. இன்று பஞ்சாப்புக்கு எதிராக அஸ்வின், நூர் அஹ்மத், ஜடேஜா ஆகியோர் ஒன்றாக விளையாடியிருந்தால் சிஎஸ்கே போட்டியை வென்றிருக்கக்கூடும். அஸ்வினுக்கு 10 கோடிகள் கொடுத்து பெஞ்சில் அமர வைத்துள்ளீர்கள். அவரை ஏன் விளையாட வைக்கவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை” என்று ஹர்பஜன் கூறியுள்ளார்.
அவர் மேலும், “அஸ்வின் சுமாராக விளையாடவில்லை. ஆனால் சிஎஸ்கே அணியில் உள்ள மற்றவர்களும் அதே அளவுக்கு செயல்பட்டுள்ளனர். பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் பந்து நன்றாக சுழன்றது. அஸ்வினை அணியில் சேர்த்திருந்தால் அவர் முக்கிய பங்கு வகிக்க முடிந்திருக்கும்” என அவர் விரிவாக விவரித்தார்.