மும்பை: இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஹெடிங்லியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது, பர்மிங்காமில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் 10-ம் தேதி லார்ட்ஸில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. இந்தத் தொடரில் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஹெடிங்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் அவர் விளையாடினார். அந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.

ஆனால் இரண்டாவது போட்டியில் பும்ரா களமிறக்கப்படவில்லை. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அதன் பிறகு, லார்ட்ஸில் நடைபெற்ற 3-வது போட்டியில் பும்ரா விளையாடினார். அந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த சூழ்நிலையில், 4-வது டெஸ்ட் போட்டி 23-ம் தேதி ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறும். இந்த டெஸ்ட் போட்டியில் பும்ராவை களமிறக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.
இர்ஃபான் பதான் மேலும் கூறியதாவது:- ஜஸ்பிரித் பும்ரா சந்தேகத்திற்கு இடமின்றி சிறந்த வேகப்பந்து வீச்சாளர். இந்தத் தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே அவரை விளையாட வைக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இதுவரை, அவர் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அனைத்து அணிகளும் தங்கள் சிறந்த வீரர் விளையாட விரும்புகின்றன. ஆனால் அது அந்த வீரரின் பணிச்சுமையைப் பொறுத்தது. அவர் சோர்வாக உணர்கிறாரா?
அவருக்கு வேறு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா? நாம் கண்டுபிடிக்க வேண்டும். 3-வது மற்றும் 4-வது போட்டிகளுக்கு இடையில் 9 நாட்கள் இடைவெளி உள்ளது. அவர் குணமடைய இது போதுமான நாட்களுக்கு மேல் இருக்கும். 4-வது டெஸ்ட் போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டி. பும்ரா காயமடையவில்லை என்றால், அவர் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
ஐசிசி சாம்பியன்ஷிப்பில் இதுபோன்ற ஒரு முக்கியமான சூழ்நிலையில், மாற்றங்களைச் செய்வது அணி நிர்வாகத்திற்கோ அல்லது பந்து வீச்சாளர்களுக்கோ நல்லதல்ல. இதுபோன்ற சூழ்நிலையில், பும்ரா அணியில் இருப்பது கூடுதல் மதிப்பைத் தரும். எனவே, அவரை அணியில் சேர்த்து விளையாட வேண்டும். இவ்வாறு இர்பான் பதான் கூறினார்.