லீப்சிக்: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான இத்தாலி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஜெர்மனியில் நடந்து வரும் இந்தத் தொடரில் நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இத்தாலி, குரோஷியா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 54வது நிமிடத்தில் குரோஷியாவுக்கு பெனால்டி கிடைத்தது.
லூகா மோட்ரிச் அடித்த ஷாட்டை இத்தாலி கோல் கீப்பர் ஜியான்லூகி அற்புதமாக தடுத்தார். எனினும் அடுத்த நிமிடத்தில் லூகா மோட்ரிச் ஒரு கோல் அடித்தார். இதனால் குரோஷியா 1-0 என முன்னிலை பெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட முடிவில் குரோஷியா 1-0 என முன்னிலை வகித்தது. காயங்களுக்கு இழப்பீடாக 8 நிமிடங்கள் வழங்கப்பட்டது. 42 வினாடிகள் எஞ்சியிருந்த நிலையில், இத்தாலிய வீரர் ரிக்கார்டோ கலாஃபியோரியின் வேகமான இடைமறிப்பு, மாட்டியா கக்காக்னியின் பந்தை அற்புதமாக கோல் வலைக்குள் செலுத்த, ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது.
இதன் மூலம் இத்தாலி அணி 4 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2வது இடம் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி மற்றும் ஒரு டிராவை பதிவு செய்துள்ளது. குரோஷியா 2 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. அந்த அணி 2 போட்டியில் டிராவும், 1 போட்டியில் தோல்வியும் கண்டுள்ளது.
இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியாவை வீழ்த்தியது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் ஃபெரான் டோரஸ் ஒரு கோல் அடித்தார். ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த ஸ்பெயின் அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் அந்த அணி 9 புள்ளிகளுடன் லீக் சுற்றில் தனது பிரிவில் முதலிடம் பிடித்தது.