துபாய்: 31 வயதான பும்ரா ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக நேற்றுமுன்தினம் தேர்வு செய்யப்பட்டார். கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியிலும் பும்ரா இடம்பிடித்தார். ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஆண்டு போட்டியின் அனைத்து வடிவங்களிலும் சிறப்பாக செயல்பட்டார். அவரது திறமை, துல்லியம் மற்றும் நிலையான செயல்பாடு அவருக்கு ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதைப் பெற்றுத் தந்துள்ளது.
இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை வென்ற ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். ராகுல் டிராவிட் (2004), சச்சின் டெண்டுல்கர் (2010), ரவிச்சந்திரன் அஷ்வின் (2016), விராட் கோலி (2017, 2018) ஆகியோரும் இந்த விருதை வென்றுள்ளனர்.
பும்ராவின் செயல்பாடு ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் பிரதிபலித்தது. அவர் 900 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்தார் மற்றும் 907 புள்ளிகளுடன் ஆண்டை முடித்தார். இதற்கு முன் எந்த இந்திய பந்து வீச்சாளரும் தரவரிசையில் இந்த அளவுக்கு புள்ளிகளை குவித்ததில்லை. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா பட்டம் வென்றதில் பும்ரா முக்கிய பங்கு வகித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஒட்டுமொத்தமாக, அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 77 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.