மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான இருதரப்பு டி20 தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
முதலில் டி20 தொடர் நடைபெறவுள்ளது. முதல் போட்டி வரும் 22-ம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ரா முதுகில் காயம் அடைந்தார். இதன் காரணமாக அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசவில்லை.
இது இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தது. இந்தியா டெஸ்ட் தொடரை 1-3 என இழந்தாலும், 32 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா தொடரின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடரில் அவர் 150 ஓவர்களுக்கு மேல் வீசினார். பணிச்சுமை காரணமாக காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது. இதை கருத்தில் கொண்டு இங்கிலாந்துக்கு எதிரான இருதரப்பு டி20 தொடரில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.
இது தவிர, பும்ராவின் காயத்தின் தன்மை இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. பும்ராவுக்கு ஏற்பட்ட காயம் கிரேடு 1 ஆக இருந்தால், குணமடைய குறைந்தது 2 அல்லது 3 வாரங்கள் ஆகும். கிரேடு 2 காயமாக இருந்தால், குணமடைய 6 வாரங்கள் எடுக்கும், கிரேடு 3 ஆக இருந்தால், குறைந்தது 3 மாதங்கள் ஆகும். எனவே, காயத்தின் தன்மை தெரிந்த பிறகே, டி20 தொடரை தொடர்ந்து நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பும்ரா விளையாடுவாரா என்பது தெரியவரும்.
இருப்பினும், பும்ரா தனது உடற்தகுதியை சரிபார்க்க பிப்ரவரி 12-ம் தேதி அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இறுதி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6-ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது.