சென்னை: பள்ளிகளுக்கு இடையேயான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) டி20 கிரிக்கெட் தொடரின் 9-வது சீசன் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியை ஈக்விடாஸ் மற்றும் சூப்பர் கிங்ஸ் அகாடமி இணைந்து நடத்துகின்றன. இந்தப் போட்டியில் தமிழகத்தின் 23 மாவட்டங்கள் மற்றும் கோவா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து 108 பள்ளிகள் பங்கேற்கின்றன. ஜேஎஸ்கே டி20 தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட போட்டிகள் வரும் 26-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடக்கிறது. இதில் சென்னை உள்ளிட்ட 23 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிகள் சென்னை, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர் உள்ளிட்ட 15 இடங்களில் நடைபெறும். ஜனவரி 17 முதல் 22 வரை திருநெல்வேலியில் 2-வது மற்றும் கடைசி கட்டத் தொடர் நடைபெறவுள்ளது.

இதில் 8 அணிகள் பங்கேற்று பட்டத்துக்காக போராடும். இந்நிலையில் இந்த தொடருக்கான கோப்பை மற்றும் அணி சீருடை வெளியீட்டு விழா சென்னை சேப்பாக்கம் மைதான வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன், சிஎஸ்கே வீரர்கள் முகேஷ் சவுத்ரி, குர்ஜப்னீத், டிஎன்சிஏ உதவி செயலாளர் ஆர்.என். பாபா, சிஎஸ்கே அகாடமியைச் சேர்ந்த லூயிஸ் மரியோனா, ஈக்விடாஸைச் சேர்ந்த விக்னேஷ் முரளி, சிஎஸ்கே அதிகாரி எஸ்.ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.