லக்னோ: ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000+ ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை இந்தியாவின் கேஎல் ராகுல் படைத்துள்ளார். செவ்வாய்க்கிழமை லக்னோவுக்கு எதிரான போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். நடப்பு சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ராகுல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். அவர் தனது 130-வது ஐபிஎல் இன்னிங்ஸில் 5,000+ ரன்களை எட்டினார்.

இதற்கு முன், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 135 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் 5,000+ ரன்களை எட்டியிருந்தார். தற்போது வார்னரின் சாதனையை ராகுல் முறியடித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 5,000+ ரன்களைக் கடந்த 8-வது பேட்ஸ்மேன் என்று ராகுல் அறியப்படுகிறார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் கோஹ்லி 8,326 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் ராகுல் 42 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இதுவரை ஐதராபாத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளுக்காக ராகுல் விளையாடியுள்ளார். தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். 2013 சீசனில் இருந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 130 இன்னிங்ஸ்களில் 5,006 ரன்கள் எடுத்துள்ளார். 40 அரை சதங்களும், 4 சதங்களும் அடித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 46.35. இவரது ஸ்டிரைக் ரேட் 135. 425 பவுண்டரிகள், 203 சிக்சர்கள் அடித்துள்ளார்.