லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராட் கோலி, தனது புதிய தோற்றத்தால் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 36 வயதான கோலி, தற்போது டெஸ்ட் மற்றும் ‘டி–20’ தொடர்களில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக வெற்றி பெற்றதும், லண்டன் பயணம் மேற்கொண்டு ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வெள்ளை தாடி, சோர்வான தோற்றம் என அடையாளம் தெரியாதளவுக்கு மாறியுள்ளார். இந்த ‘லுக்’ அவரது ஓய்வு நேரம் நெருங்கிவிட்டதைக் காட்டுவதாக சிலர் கருதினர்.
முன்னர், ஒரு நிகழ்ச்சியில் “நான்கு நாளுக்கு ஒருமுறை தாடிக்கு டை அடிக்க வேண்டிய நிலை வந்தால், ஓய்வுக்காலம் வந்துவிட்டது என்பதற்கான அறிகுறி” என அவர் தானே கூறியிருந்தார். இது, ரசிகர்களிடையே அவரது ஒருநாள் ஓய்வுக்கான ஊகங்களை உருவாக்கியுள்ளது.
இவற்றை மறுக்கும் விதமாக, கோலி நேற்று லண்டனில் வலைப்பயிற்சி செய்ததுடன், அக்டோபரில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய தொடரில் அவர் மீண்டும் களமிறங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.