லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா கடும் போராட்டத்திலும், இங்கிலாந்திடம் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தத் தோல்வியில் கேப்டன் சுப்மன் கிலின் அணுகுமுறையே முக்கியமான காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக 3வது நாள் மாலையில், இங்கிலாந்து இரண்டே ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஜாக் கிராவ்லியின் தாமதமான நடத்தை கிலின் சினத்தைக் கிளப்பியதாகக் கூறப்படுகிறது.

கிராவ்லியிடம் கில் கையை நீட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுதான் இங்கிலாந்து அணியை நெருப்பாக மாற்றியதென சிலர் விமர்சிக்கின்றனர். இந்த நிகழ்வின் பின்னணியில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “எங்கள் ஓப்பனர்களை சண்டைக்கிழுக்க செய்தால், மொத்த அணி பதிலடி கொடுக்கும்” எனக் கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர், விராட் கோலி பாணியில் கில் செயல்பட முயற்சிப்பது தோல்விக்குக் காரணமாகியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மஞ்ரேக்கர் கூறும் வகையில், கோலியின் ஆக்ரோஷ பாணி இயற்கையாக வருவது, அவருடைய ஆட்டத்தை முன்னேற்றும் சக்தியாக இருந்தது. ஆனால் கில் அதே பாணியை பின்பற்ற முயற்சித்ததுதான் அவருக்கு தோல்வியாக அமைந்திருக்கக்கூடும். மாறாக, 2வது டெஸ்ட் போட்டியில் கில் ப்ராட்மேன் போன்று அமைதியாக விளையாடி பெரிய ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றிக்கு அழைத்திருந்தார். அதுவே அவரது இயல்பான பாணி எனவும், அதையே தொடர வேண்டுமெனவும் மஞ்ரேக்கர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
3வது போட்டியில் கிலின் ஆட்டம் முன்னைய தோல்விகளைப் போல் சோர்வுடனும் தெளிவில்லாமல் இருந்ததாகவும், அவரின் பாடி லாங்குவேஜ் இயற்கையற்றதாகவும் கூறிய மஞ்ரேக்கர், “அதிகத்துக்கு நடிக்க முயற்சிக்காதீர்கள். உங்கள் உண்மையான ஸ்டைல் என்னவோ அதையே வைத்துப் போராடுங்கள்” என்றார். இதன் பின்புலத்தில், இந்தியா தொடரை சமன் செய்யும் முக்கியமான 4வது போட்டிக்கான அணிச் சேர்க்கை, கிலின் செயல்முறை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு அமையக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.