ஸ்டாவஞ்சர்: நார்வேயின் ஸ்டாவஞ்சரில் நடைபெறும் நார்வே கிளாசிக்கல் சதுரங்கப் போட்டி, 6 வீரர்கள் பங்கேற்கும் இந்தத் தொடர், இரட்டை சுற்று ராபின் முறையில் நடைபெறுகிறது. 9-வது சுற்றில், இந்தியாவின் உலக சாம்பியனான குகேஷ் சீனாவின் வெய் யியை எதிர்கொண்டார். இதில், வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடிய குகேஷ், 40வது நகர்த்தலில் வெற்றி பெற்று முழு 3 புள்ளிகளைப் பெற்றார்.

தற்போதைய சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்க வீரர் ஃபேபியானோ கருனாவை எதிர்கொண்டார். கார்ல்சன் 52வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். ஒரே ஒரு சுற்று மட்டுமே மீதமுள்ள நிலையில், 5 முறை உலகப் பட்டத்தை வென்ற நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.
அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா 13 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஃபேபியானோ கருணா 12.5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், இந்தியாவின் அர்ஜுன் எரிகைஷி 11.5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், சீனாவின் வெய் யி 8 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளனர்.