சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு வீரர்கள் இளம் வயதிலிருந்தே ரன்களை குவித்து சாதனை படைத்து வருகின்றனர். ஆனால் சிலர் 30 வயதிற்கு பின் தங்கள் ஆட்டத்தில் வித்தியாசமான முன்னேற்றத்தை வெளிப்படுத்தி, தொடர்ந்து சதங்களை அடித்து ரசிகர்களை அசர வைக்கின்றனர். நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் சதம் அடித்து, 30 வயதிற்கு பின் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பெற்றார். இதனால் இந்த சாதனையை எட்டிய 16வது வீரராக அவர் பெயர் பதிவாகியுள்ளது.

இந்த பட்டியலில் முதலிடத்தை இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார சங்ககாரா பிடித்துள்ளார். அவர் 30 வயதிற்கு பின் 43 சதங்கள் அடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹைடன், இந்தியாவின் ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலா 36 சதங்களுடன் உள்ளனர். மூன்றாவது இடத்தில் இந்திய கிரிக்கெட் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் 35 சதங்களுடன் இடம்பிடித்துள்ளார்.
இதில் நான்காவது இடத்தில் தில்ஷான் 34 சதங்களுடன், ஐந்தாவது இடத்தில் ஜெயசூர்யா 30 சதங்களுடன் உள்ளனர். அதேபோல் முன்னாள் இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே 29 சதங்களுடன் ஆறாவது இடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாரா 28 சதங்களுடன் ஏழாவது இடத்தை பிடித்துள்ளார். எட்டாவது இடத்தில் காலிஸ், ஸ்டீவ் வாக், சந்திர்பால் ஆகியோர் தலா 27 சதங்களுடன் இணைந்துள்ளனர்.
ஒன்பதாவது இடத்தில் இந்தியாவின் ராகுல் டிராவிட் மற்றும் ஆஸ்திரேலியாவின் மார்க் வாக் தலா 26 சதங்களுடன் உள்ளனர். பத்தாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் ஹாஷிம் அம்லா மற்றும் ஜோ ரூட் தலா 25 சதங்களுடன் தங்கள் சாதனையை நிலைநிறுத்தியுள்ளனர். இந்த பட்டியல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான தகவலை வழங்குவதோடு, 30 வயதிற்கு பின் கூட வீரர்கள் எவ்வளவு திறமையுடன் ஆடி சாதிக்க முடியும் என்பதற்கும் சிறந்த சான்றாக திகழ்கிறது.