கொல்கத்தா: அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் விளையாடும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் மேற்கு வங்க மாநில அமைச்சருமான மனோஜ் திவாரி தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
“ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடுவது எனக்கு சற்று ஆச்சரியமாக இருக்கிறது. பஹல்காம் தாக்குதலில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஒரு போர் நடந்தது. தாக்குதலுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்ற பேச்சு அப்போது இருந்தது. இருப்பினும், அடுத்த சில மாதங்களில் இதையெல்லாம் நாம் மறந்துவிட்டோம். இந்தப் போட்டி நடக்கிறது என்பதை நம்புவது எனக்கு கடினமாக உள்ளது. மனித உயிர் மதிப்பு இவ்வளவு தானா?

பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவதன் மூலம் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்? மனித உயிர் விளையாட்டை விட மதிப்புமிக்கது,” என்று மனோஜ் திவாரி கூறினார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கும். இந்த முறை போட்டிகள் டி20 வடிவத்தில் நடைபெறும். மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். இந்தியா, பாகிஸ்தான், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குழு ‘ஏ’வில் உள்ளன. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் ஹாங்காங் குழு ‘பி’யில் உள்ளன. இந்திய அணி செப்டம்பர் 10-ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாடும்.
இந்திய அணி 14-ம் தேதி பாகிஸ்தானுக்கும், 19-ம் தேதி ஓமனுக்கும் எதிராக விளையாடும். இதற்கிடையில், கடந்த ஏப்ரல் மாதம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் பஹல்காமைத் தாக்கினர். பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானுடன் இருதரப்பு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில்லை என்ற முடிவு கடந்த சில ஆண்டுகளாகவே நடைமுறையில் உள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இது மிகவும் தீவிரமாகிவிட்டது. இது ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்நிலையில், ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடும் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.