பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் – சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பக்கத்துக்கான சுற்றுக்கு முன்னேறியது.
33-வது ஒலிம்பிக் போட்டி பாரிஸில் நடைபெற்று வருகிறது.இதில் துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தமனு பாகர் போட்டியின் 3-வது நாளான நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகளுக்கான தகுதி சுற்றில்சரப்ஜோத் சிங்குடன் இணைந்து களமிறங்கினார். 17 ஜோடிகள் கலந்து கொண்ட இந்த பிரிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் ஜோடிகள் பதக்க சுற்றுக்கு முன்னேறும்.
இதில் மனு பாகர் – சரப்ஜோத் சிங் ஜோடி 580 புள்ளிகளை குவித்து 3-வது இடம் பிடித்து பதக்க சுற்றுக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் மனு பாகர் – சரப்ஜோத் சிங் ஜோடியானது கொரியாவின் ஓ யே ஜின், லீ வோன்ஹோ ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. கொரியா ஜோடி தகுதி சுற்றில் 579 புள்ளிகளை குவித்து 4-வது இடம் பிடித்திருந்தது.
மற்றொரு இந்திய ஜோடியான ரிதம் சங்க்வான், அர்ஜூன் சிங் சீமா ஜோடி 576 புள்ளிகளை சேர்த்து 10-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தது. துருக்கியின் தர்ஹான் செவ்வால், யூசுப் டிகெக் ஜோடி 582 புள்ளிகளுடன் முதலிடமும், செர்பியாவின் ஸோரானா அருனோவிக், டாமிர் மிகெக் 581 புள்ளிகளையும் குவித்து தங்கப் பதக்கத்துக்கான சுற்றுக்கு முன்னேறியது.