லண்டனில் இருந்து வந்த செய்திப்படி, இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றதை அடுத்து, முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் எழுதிய கட்டுரை கிரிக்கெட் உலகத்தில் கவனம் பெற்றுள்ளது. 36 வயதான கோலி, தனது 14 வருட டெஸ்ட் பயணத்தை முடித்ததாக அறிவித்தார். அவர் 123 டெஸ்ட் போட்டிகளில் 9230 ரன்கள் குவித்து, 30 சதங்களைப் பதிவு செய்துள்ளார்.

அண்மைய வரலாற்றில், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் உயிர் புகுத்தியவர் விராட் கோலி என ரசிகர்கள் பெருமையாகக் கூறுகின்றனர். ஆனால் அதேவேளை, கோலியின் ஓய்வு குறித்து பாராட்டிய மைக்கேல் வாகன், எம்எஸ் தோனியின் டெஸ்ட் கேப்டன்சியையும் குறை கூறும் விதத்தில் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
வாகன் கூறும்போது, “நான் பெரும்பாலும் ஓய்வுகளைப் பற்றி வருத்தப்படுவதில்லை. ஆனால் விராட் கோலி இங்கிலாந்தில் இந்த ஆண்டு விளையாட மாட்டார் என்பதைக் கேட்டு உண்மையாகவே வருந்தினேன். அவர் ஓய்வு செய்தது எனக்கு அதிர்ச்சி மற்றும் சோகத்தைத் தந்தது” என்றார்.
அவரது பார்வையில், கடந்த 30 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அதிக பங்களிப்பு செய்த ஒரே வீரர் விராட் கோலி. இந்திய அணி விராட் கோலி கேப்டனாகும் முன், டெஸ்ட் போட்டிகளில் அதிக ஆர்வமில்லாத அணியாக இருந்ததாகவும் அவர் கூறினார். தோனி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஜாம்பவான் என்றாலும், டெஸ்ட் அணிக்கு பெரிதாக ஈடுபாடுடன் இல்லாத அணியை அவர் வழிநடத்தினார் என விமர்சித்தார்.
விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்படும் நேரம், இந்திய டெஸ்ட் அணிக்கு மாற்றம் தேவைப்பட்ட காலம் என்றும், அவர் அந்நேரத்தில் ஆர்வத்துடன் அதைச் செய்ததாகவும் வாகன் குறிப்பிடுகிறார். கோலியின் சாதனைகள் அவரது முயற்சி, நேர முதலீடு மற்றும் ஈடுபாட்டால் சாத்தியமானவை எனவும் கூறினார்.
அவருடைய ஓய்வு, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு பெரிய இழப்பாகவே இருக்கும் என்றும், எதிர்கால வீரர்களுக்கு அவர் ஒரு வழிகாட்டியாக இருப்பார் என்றும் வாகன் தனது கட்டுரையில் வலியுறுத்தியுள்ளார்.